என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு. எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
Evil is done without effort, naturally, it is the working of fate; good is always the product of an art.
- Charles Baudelaire
துரோகத்தின் சரித்திரம் மிக விசித்திரமானது. சரித்திரப் புத்தங்களில் நாம் அறிந்திருந்த துரோகங்களை விடவும் அன்றாட வாழ்வில் துரோகத்தின் பங்கு பற்றி நாம் உன்னிப்பாக கவனிக்கத் துவங்கினால் அது வாழ்வின் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வை போல யாவரையும் ஊடுருவியிருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
அரசியல் மற்றும் சமூக தளங்களில் துரோகம் நடைபெறும் போது ஏற்படுத்தும் கவனமும் கொந்தளிப்பும் தனிநபர் வாழ்வில் ஏற்படும் போது பெரிதாக உக்கிரம் அடைவதில்லை. மாறாக அது ஒரு அறஒழுங்கை மீறிய செயல் என்று வகைப்படுத்தபடுவதோடு விதியின் செயலாகவும் அறியப்பட்டுவிடுகிறது.அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நடக்கும் அரசியல் துரோகங்களை விடவும் தனிநபர் வாழ்வில் துரோகம் ஏற்படுத்தும் வலியும் வேதனையும் மிக ஆழமானது என்பதையே இலக்கியம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றது.
துரோகத்தை கதையின் மையப்பொருளாக கொண்ட இலக்கியத்திற்கு சிறந்த உதாரணம் ஆயிரத்து ஒரு அற்புத இரவுகள். ஷாரியார் என்ற மன்னன் தனது மனைவி தனக்கு துரோகம் செய்துவிட்டு அடிமைகளோடு கள்ளஉறவு கொண்டிருக்கிறாள் என்பதற்காக அவளை கொன்றுவிட்டு அதன்பிறகு தினம் ஒரு பெண்ணை மணந்து இரவு அவளை அனுபவித்து விட்டு விடிகாலையில் அவளை கொன்றுவிடுகிறான். அப்படி மணம் செய்விக்கபட்டு முதலிரவு அறைக்கு வந்த ஷெகர்ஷாத் என்ற பெண் மரணத்திலிருந்து தப்புவதற்காக கதை சொல்லத் துவங்குகிறாள். அந்த கதைகளின் தொகுப்பு தான் ஆயிரத்தோரு அற்புத இரவுக்கதைகள்.
காமசூத்ரா போன்ற இந்திய பாலியல் பிரதியும் கூட காமத்தை பற்றிய தனது கவனத்தை விடவும் பெண்களை எவ்வாறு கண்காணித்து ஒழுக்க கட்டுபாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதையே முக்கியமாக பேசுகிறது.
பத்தொன்பதாம் நுற்றாண்டு நாவல்கள் தனது பொதுக்களமாக கொண்டிருந்தது இது போன்ற கலாச்சார மீறல்களையும் அதன் விளைவாக சிதைவுறும் குடும்பங்களையும் தான்.
குடும்ப உறவுகள் குறித்து அதுவரை கொண்டிருந்த புனிதங்களை விலக்கி உண்மையான சிடுக்குகளையும் நெருக்கடிகளையும் இந்த வகை நாவல்கள் வெளிப்படுத்த துவங்கின.
குறிப்பாக பெண்கள் குறித்து அதுவரை புனிதமாக்கபட்டு வந்த கருத்தியல்கள் யாவும் மறுதலிக்கபட்டதோடு இயல்பான விருப்பங்கள் மறுக்கபடும் போது அவர்கள் மேற்கொள்ளும் மீறல்களும் அதன் விளைவுகளும் நாவல்களில் விஸ்தாரமாக பதிவு செய்யப்பட்டன.
நாவல்களை சுவையானதொரு இனிப்பு பண்டம் போல ருசித்து ஏப்பம் விட்டு வந்த கலாச்சாரக் காவலர்களுக்கு இது போன்ற நாவல்கள் அதிர்ச்சி தருவதாகயிருந்தன. நாவல் என்பது கற்பனையின் பள்ளதாக்கு மட்டுமல்ல அது உண்மையின் நீருற்று என்று அவர்கள் புரிந்து கொள்ளவேயில்லை. ஆகவே கலாச்சார ஒழுங்கை சீர்குலைப்பதாக கூக்குரலிட்டதோடு இது போன்ற நாவல்களை தடைசெய்ய கோரி எதிர்ப்பும் நீதிவிசாரணைகளும் உருவாகின. அந்த எழுச்சி இந்த நாவல்கள் எழுப்பிய பிரச்சனைகள் மிக நிஜமானவை என்பதை உறுதி செய்வதாகயிருந்தன
பத்தொன்பதாம் நுற்றாண்டின் பிரெஞ்சு இலக்கியமும் ருஷ்ய இலக்கியமும் மதமும் கலாச்சாரமும் எப்படி மனித விருப்பங்களின் மீது தனது கெடுபிடியான ஆளுமை செலுத்தியது என்பதை பற்றிய விசாரணையை சார்ந்தே இயங்கியிருக்கிறது.
குஸ்தாவ் பிளாபெர்டின் மேடம்பவாரி (
Gustave Flaubert - Madame Bovary ) இந்த விசாரணையை மிகவும் உளவியல் பூர்வமாகவும் அதே நேரம் தன் சமகால சமூகத்தின் போலிமைகளுக்கு எதிரானதாகவும் எழுதப்பட்டிருந்தது
லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான மரிய வர்கஸ் லோசா பிளாபெர்டின் நாவலான மேடம் பவாரி பற்றிய தனது அவதானிப்புகளை Perpetual Orgy என்ற புத்தகமாக எழுதியுள்ளார். அதில் அந்நியமாதல் என்ற உணர்வு இன்றைய நாவல்களின் பிரதான உணர்ச்சி வெளிப்பாடாக இருக்கிறது. ஆனால் இந்த வெளிப்பாட்டை தோற்றுவித்த முதல் நவீன நாவல் மேடம்பவாரி என்று சிறப்பித்து கூறுகிறார்.
வாழ்வின் அர்த்தமற்ற தருணங்களையும் வெறுமையையும் துல்லியமாக வெளிப்படுத்தியதில் மேடம்பவாரியை போல வேறு எந்த நாவலையும் நான் வாசித்தில்லை என்று பிளாபெர்ட்டை சிறப்பித்து கூறுகிறார் ஏ.எஸ்.பையட். அது போலவே மேடம் பவாரி எழுதப்படாமல் போயிருந்தால் ஜேம்ஸ் ஐய்ஸின் யூலிசியஸ் தோன்றியிருக்காது என்று நபகோவ் தனது உரையொன்றில் குறிப்பிடுகிறார்.
இதற்கு மேலாக நாடின் கோடிமர் தனது கட்டுரையில் மார்சல் புரூஸ், ஜாய்ஸ், ஹென்றி மில்லர், டி.ஹெச். லாரன்ஸ் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பிளாபெர்ட்டின் பாதிப்பில் உருவானவர்களே என்று அடையாளப்படுத்தியிருக்கிறார்.
பிரெஞ்சு இலக்கியத்தின் மிக முக்கிய நாவலான மேடம்பவாரி வெளியாகி நுற்றியம்பது வருடங்கள் கடந்து விட்டன. 1856ல் வெளியாகி தடைசெய்யப்பட்டு திரும்பவும் 1857ல் வெளியானது முதல் மேடம்பவாரி சந்தித்த சர்ச்சைகளும் வாதபிரதிவாதங்களும் நுட்பமான வாசிப்புமே அதை இன்று வரை தொடர்ந்து செவ்வியல் பிரதியாக தக்கவைத்திருக்கிறது.
மேடம்பவாரி இதுவரை பதிமூன்றுக்கும் மேற்பட்ட முறை படமாக்கபட்டிருக்கிறது. ஆறு முறை தொலைக்காட்சி தொடராக்கபட்டிருக்கிறது. அத்தோடு இருபத்திரெண்டு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
மேடம்பவாரி ஒரு நாவல் மட்டுமல்ல. அது ஒரு குறியீடு. ஒரு அடையாளம். எதிர்ப்புக்குரல். பத்தொன்பதாம் நுற்றாண்டு பிரெஞ்சு பூர்ஷ்வா வாழ்வின் மீதான விமர்சனம்.
**
எனக்கு மேடம் பவாரி பிடித்திருப்பதற்கான காரணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று அது பகல்நேரங்களை செய்வதறியாமல் கழிக்கும் மனைவியின் தனிமையும் வெறுமையும் பற்றி பேசுகிறது என்பது. பெரும்பான்மை இந்திய குடும்பங்களில் காணமுடிகிற ஆனால் இந்திய நாவல்கள் அதிகம் கவனம் கொள்ளாமல் விட்டுப் போன முக்கிய அம்சமாக இது எனக்கு தோன்றுகிறது.
திருமணமாகி கணவன் வீட்டிற்கு வரும் புது மனைவியின் தனிமை மிக விசித்திரமானது. அவளது பகல்பொழுதுகள் வெறுமை நிரம்பியவை. பல நேரங்களில் அது விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடைப்பட்டது.
வீட்டை ஒழுங்கு செய்வதிலும், பழைய பொருட்களை சுத்தம் செய்வதையும் தாண்டி வெறுமை அவள் முன்னால் ஒரு பூதமென எழுப்பி நிற்கும் போது அவள் தன்னை அறியாமல் தனிமையின் பூதத்திடம் தன்னை ஒப்படைத்து கொண்டுவிடுகிறாள். அது அவளை தனக்கு தானே பேசிக் கொள்ள வைக்கிறது. பகல்கனவு கொள்ள செய்கிறது.
அந்த கனவுகள் நிஜமா இல்லை கனவு தானா என்று தெரியாத மயக்கத்தை உண்டு பண்ணுகிறது. தெருவை, வீட்டை சுற்றிலும் நடக்கும் சிறு சிறு காரியங்களை, குருவிகளின் சப்தத்தை, மதிய வெயிலின் நிசப்தத்தை கேட்க வைக்கிறது. தனிமையின் பள்ளதாக்கில் வீழ்ந்து கிடந்து கிடந்து அவர்கள் வெளிறிய முகமும் வெளிப்படுத்த முடியாத துக்கமும் கொண்டவர்களாக மாறிவிடுகிறார்கள். அந்த உலர்ந்த பொழுதுகளை சிறப்பாக பதிவு செய்திருக்கிறது மேடம் பவாரி .( சத்யஜித்ரேயின் சாருலதா திரைப்படத்தின் ஆரம்ப காட்சிகளில் இது போன்ற ஒரு பகல்நேரத்து வெறுமை மிக நுண்மையாக படமாக்கபட்டிருக்கும் )
இரண்டாவது காரணம் பள்ளிவயதில் புத்தகம் படிக்க துவங்கி புத்தங்களின் வழியாக உருவான கற்பனை உலகம் போல ஏன் யதார்த்த உலகம் இல்லை என்று புரியாமல் தடுமாறும் ஒரு வாசக மனப்போக்கினை இந்த நாவல் அழகாக படம் பிடித்து காட்டுகிறது. மேடம்பவாரி எனும் எம்மா தனது பள்ள