என் கதைகள் உலகோடு நான் ஆடிய பகடையாட்டம். தோற்பதும் ஜெயிப்பதும் பற்றிய கவலையின்றி திரும்பத் திரும்ப எதிர்பாராமையைச் சந்திக்கும் ஒரு தீரா விளையாட்டு.  எறும்புகள் இழுத்துக் கொண்டு போகும் வெல்லக்கட்டியைப் போல உலகை எனது இருப்பிடத்திற்குள் இழுத்துக் கொண்டு வந்துவிட முயன்றதன் விளைவுதான் எனது எழுத்துகள்.
 
     
 
 
 
 
புதிய பதிவுகள்
 
 
பிற  பதிவுகள்
 
வலை தள வாசிப்பிற்கு
 
சிறுகதைகள்
 
1.மூன்று குடும்பக் கதைகள்

2.எல்லா நாட்களையும் போல
 
கட்டுரைகள்
 
1. எனியோ மோரிகோன்

2. மேடம் பவாரி
 
முந்தைய பதிவுகள்
 

 Visitor Count
hit counters

 

நேர்காணல்கள்
 
நேர்காணல் - 1


 புதுவகை எழுத்துகள் ஒரு போக்காக தமிழில் அறிமுகமான காலகட்டத்தில் அந்த வகை எழுத்துக்களை முன்வைத்தவர்களில் நீங்களும் ஒருவர். அப்போது யதார்த்தவாதம் முடிந்துவிட்டது கதை அம்சம் தேவையில்லை என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன ஆனால் அப்போதும் புதுமுயற்சிகளை செய்தவர்களில் நீங்கள் மட்டும் கதையம்சம் கொண்ட கதைகளை எழுதி வந்தீர்கள். இது சார்ந்து குறிப்பாக அப்போது நடைபெற்ற விவாதங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள். ?

யதார்த்தவாதம் என்ற பெயரில் சுயஅனுபவத்தை எழுதுவது மட்டுமே கதை என்று கூக்குரலிட்டுக் கொண்டு ஒருசாராரும் , மறுபக்கம் லட்சியவாத கோட்பாடுகளுக்கு ஏற்றபடி கதையை தைத்துக் கொடுக்கும் சீர்திருத்த கதாசிரியர்களுக்கும் இடையில்   கதைகள் என்பது ஒரு புனைவு என்று சொன்னவர்களில் நானும் ஒருவன். இது ஒன்றும் எனது கண்டுபிடிப்பல்ல.   கதைகள் புனைவு என்பது யாவரும் அறிந்த உண்மை தான். ஆனால் புனைவு என்பதை   பொய் என்று புரிந்து வைத்திருப்பதை நான் மறுத்தேன். கற்பனை என்பது உண்மைக்கு எதிரானதல்ல. உண்மையை புரிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான சாத்தியபாடு என்று கூறினேன்.

யதார்த்தம் என்பதும் ஒரு புனைவே. அதை முன் முடிவுசெய்யப்பட்ட புனைவாக சொல்லலாம். கடந்த காலங்களில் யதார்த்தத்தை தட்டையான ஒற்றைப் பரிமாணமுள்ளதாக மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யதார்த்தம் பலதளங்களை உடையது. அதீதமும் இயல்பும் ஒன்றாக முயங்கிகிடக்கக் கூடியது. காலத்திற்கு காலம் யதார்த்தத்தை பற்றிய புரிதல் தொடர்ந்து மாறிக் கொண்டேதானிருக்கிறது , யதார்த்தம் என்ற பெயரில் நடைபெற்று வந்த சலிப்பூட்டும் ஒற்றைதன்மை கதைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று   தான் பேசியும் எழுதியும் வந்திருக்கிறேன். நம் கதை மரபு ஒற்றைதன்மை வாய்ந்தது அல்ல. அது பன்முகத்தன்மை வாய்ந்தது,

கர்ப்பிணி ஒருத்தி நடந்துவரும் போது அவள் வயிற்றில் உள்ள குழந்தை தன் இருப்பிடத்தில் இருந்து நகரவேயில்லை ஆனால் குழந்தையும் பலமைல் துரம் கடந்து தானே செல்கிறது. இது யதார்த்தமா , இல்லையா?

 புதிய கதை எழுத்து இன்று தேக்கநிலை அடைந்துவிட்டிருக்கிறது. மீண்டும் யதார்த்தவாத கதைகள் வரத்துவங்கியுள்ளதே , இந்த  மாற்றத்தை எப்படி பார்க்கிறீர்கள் ?

புதிய கதை எழுத்து என்று எதைச் சொல்கிறீர்கள் என தெரியவில்லை. நான் புதிய கதை எழுத்து பாரதி புதுமைபித்தனில் துவங்கி மௌனி , நகுலன், முத்துசாமி, ஜி.நாகராஜன், சம்பத், கோபிகிருஷ்ணன் , ஜெயமோகன், கோணங்கி, , உமா வரதராஜன், முத்துலிங்கம்.  என நீண்டு தொடர்ந்து வந்து கொண்டேயிருப்பதாகவே    நினைக்கிறேன்.
எது யதார்த்தம் என ஏதாவது வரையறையிருக்கிறதா என்ன? பயன்பாட்டிற்கு  உட்படுகின்றவற்றை மட்டுமே நாம் யதார்த்தமாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நம் புலன்கள் தான் யதார்த்தத்தின் வரையறையாகயிருந்திருக்கிறது. ஆனால் புலன்கள் முழுமையானவையல்ல. அவை குறைபாடானவை என்பதை ஒவ்வொரு மனிதனும் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து தானே இருக்கிறான். நம் கால இடப்பிரக்ஞை கூட புனைவு தானே. அதை நாம் அன்றாடம் புழங்கவில்லையா ? புனைவை தான் நமது பெயராக சூடியிருக்கிறோம் .நம் உடல்கள் புனைவால் தானே நிரம்பியிருக்கிறது.

புனைவை புரிந்து கொள்வதற்கும் அதனுடாக உள்ள புனைவடுக்குகளை கண்டறிவதற்கும் , உருவாக்குவதற்குமே புதியகதை எழுத்து முயற்சிக்கிறது. அது தமிழில் தொடர்ந்து எழுதப்பட்டு கொண்டு தான் வருகிறது.

கடந்த கால எழுத்தாளர்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ளவேயில்லை தங்கள் எழுத்து உண்மையை கண்ணாடி போல பிரதிபலிக்கின்றது என்று அறிவித்துக் கொண்டார்கள்.. ஆனால் கண்ணாடி உருவத்தை இடவலமாக மாற்றி தான் பிரதிபலிக்கும் என்ற நிஜத்தை கூட புரிந்து கொள்ளாமல் இருந்தது தான் வேடிக்கையாக இருக்கிறது

 இதுவரை யதார்த்தவாதமாக   நம்பபட்டு வந்தவைகள் தவறானவைகளா ?

சொல்லும் மரபிலிருந்து எழுத்து மரபிற்கு கதைகள் மாற்றம் கொண்ட போது கூட கதை மரபுகள் கைவிடப்படவில்லை. தமிழ்சிறுகதையின் ஆரம்ப கால முயற்சிகளில் வெளிப்படையாக இதை காணமுடிகிறது. குறிப்பாக உதிரி மனிதர்களுக்கும் , அபௌதீக தளங்களுக்கும், மறுகதைகளுக்கும் , இடமிருந்திருக்கிறது.

பாரதி, புதுமைபித்தன் கதைகளில் கதைசொல்லல் தனித்துவமாக தானே இருந்தன. ஆனால் அதன் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கதையின் மையமாக குடும்பத்தை சுருக்கியதும் அதன் தினப்பாடுகளை பதிவு செய்வது மட்டுமே கதைகளின் வேலை என்று முடிவு செய்து கொண்டு ரேடியோ நாடகங்களை போல வாய்ஒயாமல் பேசும் கதாபாத்திரங்களை எழுதி நிரப்பியது தவறான வழிகாட்டுதலாக படுகிறது. அதன் தொடர்ச்சி அடுத்த பதினைந்து வருடங்களில் சிறுகதைகள் மத்தியதர வர்க்கத்து   மனிதர்களின் புலம்பலுக்கும் நிராசைகளுக்கும் உரிய வடிவமாக சுருங்கிப் போய் விட்டது.

கார்க்கி, செகாவ், தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களின் ருஷ்யசிறுதைகளும் மாப்பசான். பால்சாக் போன்ற பிரெஞ்ச் இலக்கியவாதிகளும் எட்கர்ஆலன் போ , ஜாக் லண்டன் , ஸ்டீபன் கிரேன் போன்ற அமெரிக்க சிறுகதையாசிரியர்களும் தமிழில் அறிமுகப்படுத்தபட்ட போதும் அந்த எழுத்துகளிடமிருந்து தமிழ் எழுத்தாளர்கள் எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது ஆச்சரியமாக தானிருக்கின்றது.

அதே வேளையில் வளமையான சங்ககவிதைகளும் சமணபௌத்த காப்பியங்களும், நுறுவகை கதை சொல்லல் முறைகொண்ட நாட்டார் கதைகளும், தொன்மங்களும் நம்பிக்கைகளும். கூட தமிழ் சிறுகதையாசிரியர்களை பாதிக்கவேயில்லை. பின் எதிலிருந்து தான் இவர்கள் உருவானார்கள். ? எதை தங்களது பார்வையின் அடித்தளமாக கொண்டிருந்தார்கள்.? எதை யதார்த்தம் என்று சொல்கிறார்கள் என புரியவில்லை.

 உங்களது இரண்டாவது நாவலான நெடுங்குருதியை ஒட்டி உங்களது எழுத்துகளில் ஒரு மாற்றம் தெரியத்துவங்குகிறது. அக்காலகட்டத்தில் எழுதப்பட்ட கதைகளில் கூட இந்த மாற்றத்தை உணர முடிகிறது. குறிப்பாக நெடுங்குருதி ஒரு மேஜிக்கை தன்னுள் வைத்திருக்கும் அதே நேரத்தில் அது ஒரு யதார்த்த வாத நாவலாகவும் இருக்கிறது. உங்கள் எழுத்தில் நிகழ்ந்த இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன ?

நெடுங்குருதி நாவலின் துவக்கம் பத்தாண்டுகளுக்கு முன் நான் எழுதிய காட்டின் உருவம் சிறுகதையிலே துவங்குகிறது. நெடுங்குருதி நாவல் வேம்பலை என்ற புனைவான கிராமத்தில் வாழும் வேம்பர்கள் என்ற மனிதர்களையும் அவர்களது மூர்க்கமான வாழ்க்கை போராட்டத்தையும் , துக்கத்தையும் வேதனைகளையும் அவர்களது விசித்திர கனவுகளையும் சொல்கிறது.

உப பாண்டவம் போன்று  இதிகாசத்தின் மீதான மீள்புனைவாக ஒரு நாவலை எழுதிய பிறகு   இருபதாண்டுகளுக்கும் மேலாக என்னுள் புதையுண்டிருந்த வேம்பலையை எப்படி பதிவு செய்வது என்று   யோசனையாக இருந்தது.

பால்ய நாட்களில் மாட்டுதரகர்களோடு சந்தைக்கு செல்லும் போது அவர்கள் தாங்கள் அறிந்த கதையை வழியெல்லாம் சொல்லிக் கொண்டு வருவார்கள். அதில் எது நிஜம் எது பொய் என்று பிரிக்கமுடியாது. கதாபாத்திரம் போன்று வர்ணிக்கப்பட்ட மனிதனை சந்தையில் நேரிலே நாம் காண சந்தர்ப்பம் அமையும். அதே நேரம் அவர்கள் தங்களது நிலவியலையும் அதனை பீடித்திருக்கும் துர்கனவையும் தொடர்ந்து எல்லாகதைகளிலும் சொல்லிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

அந்த கதை சொல்லல் முறையை தான் நெடுங்குருதியிலும் காணமுடியும். குறிப்பாக இயற்கையையின் கரங்கள் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகின்றன என்பதையும் அதன் குரூரமும் கருணையும் எப்படி பீறீடுகின்றன என்பதையுமே இந்நாவல் மையமாக கொண்டிருக்கிறது.

என்னைப் பொருத்தமட்டில் இந்த நாவல் ஒரு வெயிலின் கதை . நிலப்பரப்பெங்கும் வெயில் ஒரு மூர்க்கமான மிருகத்தை போல தன்விருப்பப்படி சுற்றியலைகிறது. வெயிலை குடித்துக்கிறங்கிய மனிதர்கள் தீமையின் உருக்களை போல நடமாடுகிறார்கள். வாழ்வை பற்றிய உயர்வெண்ணங்கள் எதுவும் அவர்களிடமில்லை. சாவை குறித்த புலம்புதல்களுமில்லை. அந்த நிலவியலில் வாழ்வது என்பதே ஒரு மாயம் தான்.

தாவரங்களின் உரையாடலில் இருந்து எனது கதைவெளி மாறிக் கொண்டுவரத்துவங்கியது. அதன் தொடர்ச்சியாக வெயிலைக் கொண்டுவாருங்கள் தொகுப்பின் அதிகதைகளையும் உப பாண்டவம் நாவலையும் சொல்லலாம். அதன் பின்னணியில் தான் நெடுங்குருதி வந்திருக்கிறது. ஆகவே எழுத்து முறை இப்போது தான் மாற்றமடைந்துள்ளது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழில் யதார்த்தவாத கதைகளே முழுமையாக  எழுதி முடிக்கபடவில்லை   இந்நிலையில் புதுவகை எழுத்துக்களுக்கு அவசியம் இல்லை மேலை இலக்கியங்களை படித்துவிட்டு அடிக்கபடும் காபி என்கிற வகையில் விமர்சனங்கள் தற்போது முன்வைக்கபடுகின்ற இதற்கான உங்களது எதிர்வினை ?

ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா ? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காபியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள். ? வம்பு பேச்சுகளும் அவதுறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன. ? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ? தங்களுக்கு புரியாத எதுவாகயிருந்தாலும் அது வெளிநாட்டு இலக்கியத்தின் காப்பி என்று கூச்சப்படாமல் சொல்வதற்கு ஒரு கூட்டமே தயாராகயிருக்கிறது.

 இன்றுள்ள தமிழ் இலக்கிய போக்குகள் எப்படியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

பன்முகப்பட்டதாகவும் பல்வேறு சீரிய தளங்களில் செயல்படுவதாகவும் புதிய எழுத்துவகை உருவாகியிருக்கிறது. குறிப்பாக தமிழ்கவிதையில் பெண்கவிஞர்களின் வரவு இதுவரையில்லாத சாத்தியங்களை உருவாக்கியிருக்கிறது. அவர்கள் ஆபாசமாக எழுதுகிறார் என்று கூச்சலிடுவது அர்த்தமற்றது. ஆபாசம் வீட்டு தொலைகாட்சியில் , பாடல்களில், பேச்சில் , நடவடிக்கைளில் வீடுகளிலும் ஊடகங்களிலும் பெருகிவழிவதை ரசித்துக் கொண்டிருப்பவர்கள் பால்உணர்வுகளை   ஒடுக்கபட்ட உடலின் குரலாக கவிதைகளில் வெளிப்படுத்துவதை எதிர்ப்பது ஒரு திட்டமிட்ட வன்முறை என்பேன்

சிறுகதையிலும் உதிரிமனிதர்கள் பற்றியும் மனத்திரிபுகள், பால் இச்சைகள் குறித்து பேசும் கதைகள் சிறப்பாக எழுதப்பட்டுவருகின்றன. புத்தகவெளியிட்டில் ஒரு உலகத்தரம் தமிழுக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஆனால்   நாவல்கள் மிக குறைவாகவே எழுதப்படுகின்றன.

இப்போது உலக அளவில் யாருடைய எழுத்துகளை முக்கியமானதாக கருதுகிறீர்கள் ?

போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த நோபல் பரிசு பெற்ற  எழுத்தாளரான ஜோஸ் சரமாகோவின் நாவல்கள் மிகவும் சிறப்பானதாகயிருக்கின்றன. குறிப்பாக   அவரது  The stone Raft,  The Gospel According to jesus chirst   இரண்டையும் கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த  மிகச்சிறந்த நாவல்களெனச் சொல்வேன். இன்னொருவர்   Orhan Pamuk    என்ற துருக்கியை சேர்ந்தவர் இவரது நாவலான My name is Red மார்க்வெஸின் நுற்றாண்டுகால தனிமைக்கு நிகரானது. 26 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டிருக்கும் பின்நவீனத்துவ நாவலது.

ஹருகி முராகமியின் சிறுகதைகளும் வில்லா ஸிம்போர்ஸ்காவின் கவிதைகளும் வாசிப்பில் புதிய அனுபவம் தருகின்றன.

 உயிர்மை இதழில் உலக எழுத்தாளர்கள் பற்றி, அவர்களது எழுத்துக்கு அப்பாற்பட்ட ஆர்வங்களை பற்றி எழுதி வருகிறீர்கள். இதை எழுதவேண்டும் என்று என்ற எண்ணம் எப்படி உருவானது ?

எனது பதினெட்டு வயதிலிருந்து உலக இலக்கியங்களை வாசித்துவருகிறேன். அத்தோடு சமகாலத்தின் முக்கிய படைப்புகள் எந்த தேசத்தில் எழுதப்பட்ட போதும் அவற்றை தேடிவாசிக்கும் பழக்கம் கொண்டிருக்கிறேன். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இலக்கியவாதிகளை தேடிச் சென்று பார்த்து அவர்களோடு எனது வாசிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

எழுத்தாளர்களின் வேலை கதை எழுதுவது மட்டுமே என்று கற்பிக்கபட்டிருந்த பிம்பம் இந்த வாசித்தலில் , சந்திப்பில் கொஞ்சம் கொஞ்சமாக தகர்ந்து போக துவங்கியிருந்தது. பஷீரை சந்தித்த போது சீன யாத்ரீகன் மார்க்கோ போலோவை சந்தித்து பேசிக் கொண்டிருந்தது போன்ற அனுபவமேயிருந்தது. மகேஸ்வததாதேவியை சந்தித்த போது பழங்குடியினருக்காக போராடும்   போராளியை கண்ட சந்தோஷம் உண்டானது.

எழுத்தாளர்கள் கதைகளை விடவும் புதிராக வாழ்ந்திருக்கிறார்கள். எதை எதையோ தேடியலைந்திருக்கிறார்கள். அரசியல் ஈடுபாட்டின் காரணமாக சிறைபட்டிருக்கிறார்கள். ஒடுக்கபட்ட மக்களின் விடுதலைக்காக போராடியிருக்கிறார்கள். எழுத்தாளனின் செயல்பாடு பன்முகப்பட்டது. எழுத்தாளன் யாவையும் கடந்த ஒரு ஞானி , எழுத்து ஒரு அகதரிசனம் என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக என் வாசிப்பில் நான் நெருக்கமாக உணர்ந்த சிறந்த இருபது புத்தகங்கள் குறித்து வாக்கியங்களின் சாலை என்று ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறேன். அதன் தொடர்ச்சியாக தான் உயிர்மை இதழில் தற்போது எழுதி வரும் பத்தியை சொல்லலாம்.

இந்தத் தொடரில் தமிழ் எழுத்தாளர்கள் மீது அவர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த ஆர்வம் இல்லை என்ற விமர்சனத்தை முன்வைக்கிறீர்கள் அப்படியொரு ஆர்வம் எழுத்தாளர்களுக்கு கட்டயாம் இருக்க வேண்டும் என்று கருதுகிறீர்களா ?

ஆர்வம் என்று அதை சொல்ல முடியாது. ஒரு கற்றுக் கொள்ளல் என்று சொல்லலாம். கற்றுக் கொள்வதை கட்டாயப்படுத்த முடியுமா என்ன ? நாம் எழுதத் துவங்கியதும் கற்றுக் கொள்வதை நிறுத்திவிடுகிறோம்.

சமகால நிகழ்வுகள் இலக்கியத்தில் பதிவு செய்யப்படவேண்டியது அவசியமில்லையா ?

சமகாலம் என்றால் என்ன? காலண்டர்தாட்கள் காட்டும் தேதியும் வருடமுமா அல்லது ஊடகங்கள் பெருக்கி காட்டும் பிரச்சனைகளை சமகாலம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறீர்களா. ஒரு நபர் ஒரு நாளில் தான் சந்திக்கும் மனிதர்களை நிகழ்வுகளை பொறுத்து தன் வயது அதிகமாகிக் கொண்டும் குறைந்து